குமரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

0

குமரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மின்வெட்டு

குமரி மாவட்டத்தில் நேற்று இரவு 7.30 மணியில் இருந்து மின்வெட்டு ஏற்பட்டது. கிராமப்புறங்களில் திடீரென மின்சாரம் தடைபடுவதும், பின்னர் வருவதுமாக இருந்தது. நாகர்கோவிலை பொறுத்த வரையில் ஒரு சில இடங்களில் தொடர் மின்வெட்டு இருந்தது. அதே சமயம் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது. அறிவிக்கப்படாமல் இவ்வாறு மின் வினியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு 11 மணி வரை இதே நிலை நீடித்ததால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

 அதன்பிறகும் சில இடங்களில் மின்வெட்டு இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
வாட்ஸ்-அப் உரையாடல்

அதோடு மட்டும் அல்லாது மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்ததால் செல்போன் மற்றும் லேப் டாப்புக்கு சார்ஜ் போடவும் முடியவில்லை. இதன் காரணமாக சிரமத்தின் உச்சத்துக்கே சென்ற சிலர் அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

 ஆனால் அதற்கு தங்களுக்கு தெரியவில்லை என்று மின்வாரிய ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு மின்வாரிய அலுவலர் ஒருவரிடம் மின்சாரம் எப்போது வரும்? என்று ஒரு வாலிபர் கேட்கும் உரையாடல் நேற்று வாட்ஸ்அப்பில் வெளியானது. அந்த உரையாடலில் பேசும் மின்வாரிய ஊழியர், ‘எங்களுக்கே மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாது’ என்று கூறுகிறார். அதற்கு ‘உங்களுக்கே தெரியவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று கேட்பது’ என்று கேட்கிறார். உடனே ‘மந்திரிகளிடம் போய் கேளுங்கள்’ என்று மின்வாரிய ஊழியர் பதிலளிக்கிறார். இந்த உரையாடல் தற்போது வாட்ஸ்அப்பில் பலராலும் பரப்பப்பட்டு வருகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)