வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்புஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. எப்.சி.கட்டணத்தை குறைக்க வேண்டும். 15 ஆண்டுகள் பழைய ஆட்டோக்களுக்கு எப்.சி. கட்டணம் 10 மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பொன் சோபனராஜ் தலைமை தாங்கினார். மோகன், வேலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்க மோகன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் அந்தோணி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், வடிவேல்குமார், பெல்லி பென், ஆசீர், பிரின்ஸ், மணிகண்டன், ராஜகுமார், ராஜா, செல்லையா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது. பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கொடுத்தனர்.