வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு ..

0

 


மணக்குடியில் வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். 

கன்னியாகுமரி 
மேலகிருஷ்ணன்புதூர்

மணக்குடியில் வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு..
வேளாங்கண்ணிக்கு சென்றார்

 மணக்குடியை சேர்ந்தவர் மரிய நாயகம். இவருடைய மனைவி பிரான்சிஸ்காள் (வயது65). மரிய நாயகம் ஏற்கனவே இறந்து விட்டார். இந்தநிலையில் பிரான்சிஸ்காள் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகன்களுடன் வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு பிரான்சிஸ்காள் நேற்று அதிகாலையில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த போது முன்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.


பணம் திருட்டு 

வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் உண்டியலில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. பிரான்சிஸ்காள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுபற்றி பிரான்சிஸ்காள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 


கைரேகை பதிவு 

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு மர்ம ஆசாமியின் ரேகை பதிவாகி இருந்தது. இந்த ரேகையும் நேற்று முன்தினம் நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரில் திருட்டு நடந்த அரசு ஊழியர் வீட்டில் பதிவான ரேகையும் ஒன்றாக இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

எனவே, இந்த இரண்டு திருட்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)