கன்னியாகுமரி-வட்டக்கோட்டை வரை சொகுசு படகு சவாரி அடுத்த மாதத்தில் தொடங்கும்

0

சொகுசு படகுகள்

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் இருந்து கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட விரும்புவார்கள். தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இதை கருத்தில் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு ரூ.4 கோடி மதிப்பில் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய இரு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. இவை தொடக்கத்தில் சில நாட்கள் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற நிலையில் படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொடர் பாதிப்பாலும் பயன்பாடற்று படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதிகாரிகள் ஆய்வு

எனவே இந்த படகுகளை பயனுள்ள வகையில் சுற்றுலா பயணிகள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து 2 சொகுசு படகுகளையும் வட்டக்கோட்டைக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து வட்டக்கோட்டைக்கு இரு சொகுசு படகுகளின் சவாரி மேற்கொள்ளும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் சிவ சண்முகராஜா மற்றும் அதிகாரிகள் சமீபத்தில் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வட்டக்கோட்டைக்கு இயக்க முடிவு 

இந்தநிலையில் சுற்றுலா வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது நவம்பர் மாத தொடக்கத்தில் கன்னியாகுமரி படகுத் துறையில் இருந்து வட்டக்கோட்டைக்கு இரு சொகுசு படகு சவாரியையும் தொடங்குவதற்கான ஏற்பாட்டை விரைவுபடுத்துமாறும், திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு பணியையும் விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரு சொகுசு படகுகளையும் முதல் கட்டமாக படகுத் துறையில் இருந்து வட்டக்கோட்டைக்கு சென்று வர ஏற்பாடு செய்து வருகிறோம். சுற்றுலா பயணிகள் மத்தியில் அதன் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக பிற இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான டிக்கெட் ரூ.700 முதல் ரூ.1,000 வரை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் மாத சீசன் நேரத்தில் தொடங்க உள்ளது. மேலும் படகு பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு வசதியும் தொடங்கப்பட உள்ளது என்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)