முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா.

0

கன்னியாகுமரி நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 வேளிமலை முருகன்

 கோவில் தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருக பெருமானின் விழாக்களில் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி விழா ஆகும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடந்தது. தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு முருக பெருமான் கோவிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் சூரனோடு போர் புரிந்தார். பின்னர் இறுதியாக கோவிலின் கிழக்கு நடையில் வைத்து சூரனை வதம் செய்தார். தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


பத்மநாபபுரம் 

இது போல் பத்மநாபபுரம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு முருக பெருமான் கோவிலில் இருந்து எழுந்தருளி பத்மநாபபுரம் நான்கு ரதவீதிகளிலும் சூரனோடு போர் புரிந்தார். இறுதியில் கோவில் முன்வாசலில் வைத்து சூரனை வதம் செய்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

 குளச்சல் 

குளச்சல் அம்பாள் தேவசேனாபதி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று பிற்பகலில் குளச்சல் நகர சாலைகளில் சூரன் வீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு சிறப்பு பஜனை, 5.30 மணிக்கு முருக பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் போன்றவை நடந்தது. மாலை 5.30 மணி முதல் 6.45 மணிவரை சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து முருக பெருமானுக்கு களிமார் ஆற்றில் ஆராட்டு, பின்னர் மயில் வாகனத்தில் கோவிலுக்கு சாமி பவனி வருதல், இரவு 9 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலையில் தீபாராதனை, மதியம் 12 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து சிறப்பு அன்னதானம் போன்றவை நடக்கிறது.

நாகர்கோவில்

 நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நேற்று காலையில் சாமிக்கு அபிேஷகம், தீபாராதனை போன்றவை நடந்தன. தொடர்ந்து மாலை 4 மணியளவில் முருக பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் சூரனை வதம் செய்ய எழுந்தருளினார். 4 ரத வீதிகளில் வலம் வந்து பின்னா் நாகராஜா கோவில் திடலில் வைத்து சூரனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி நாகராஜா கோவில் சுற்று வட்டார பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதே போல் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. 

வெள்ளிமலை

 வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சூரசம்ஹார விழாவையொட்டி நேற்று மதியம் 12.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 2 மணி முதல் சிங்காரி மேளம், ஒயிலாட்டம் தொடர்ந்து சாமி சூரசம்ஹாரத்திற்காக குதிரை வாகனத்தில் எழுந்தருளல், 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் போன்றவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு சாமி மயில் வாகனத்தில் உலா வருதல் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்





Post a Comment

0Comments
Post a Comment (0)