கடன் உதவி பெற்று தருவதாக கூறி பெண்களிடம் கைவரிசை காட்டிய தம்பதி கைது

0குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. 

அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சித்திரவேல், பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)