கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதித்த தந்தையை அவரது மகன் தோளில் சுமந்து சென்றும் உயிரிழந்த சம்பத்தை தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக சாலை வசதி அமைக்க வேண்டும் என ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் அருகே மேற்கு தொடர்சி மலையோர பகுதியில் கடந்த 12 ஆம் தேதி கோலஞ்சிமடம் ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் சாலைவசதி மற்றும் பாலம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் தோளில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றும் தந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இதையடுத்து பலரும் சாலை வசதி செய்து தர வேண்டும் எனவும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலமும் மழை, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த இடத்தில் தரமான பாலம் அமைக்கவும் சாலை வசதி இல்லாத அனைத்து வீடுகளுக்கும் பொதுவான போக்குவரத்து சாலை அமைக்கவும் விரைந்து திட்ட மதிப்பீடு வழங்குமாறு செயல் அலுவலருக்கு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதை தமிழக அரசுக்கு பரிந்துரைத்து விரைவில் தீர்வு ஏற்படுத்தும் என உறுதி அளித்துள்ளார்.