குப்பையோடு குப்பையாக சுருண்டு கிடந்த தாய்; மீட்ட பொதுமக்கள்..

0

தன் தாயை சரிவரக் கவனிக்காமல் பாழடைந்த வீட்டில் குப்பைக்கு மத்தியில் அவரை அவரது மகன் தவிக்க விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவரது மகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கித்தேரி அம்மாள். 80 வயதான இவருக்கு கணவர் இல்லை. இவரது மகன் செல்வராஜ் வயோதிக நிலையில் இருக்கும் தன் தாயை சரிவரக் கவனிக்காமல் கைவிட்டுவிட்டார். ஏற்கெனவே வயோதிகத்திற்கே உரிய உடல் உபாதைகளால் தவித்துவந்த கித்தேரி அம்மாள் உரிய உணவுகளும் இன்றி பாழடைந்த தன் பூர்வீக வீட்டில் தனித்து விடப்பட்டார். அங்கு குப்பைகளும், அழுக்குத் துணிகளும் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்து வந்தார் கித்தேரி அம்மாள்.


உரிய உணவுகூட இன்றி படுக்கையிலேயே கிடந்த கித்தேரி அம்மாளின் நிலைக்குறித்து அக்கம், பக்கத்து வீட்டினருக்குத் தெரியவந்தது. அவர்கள் வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது உடல் பலவீனமான நிலையில் இருந்தார் கித்தேரி அம்மாள். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திலும் தெரியப்படுத்தினர்.

 இதனைத் தொடர்ந்து கித்தேரி அம்மாளின் மகன் செல்வராஜிடம் தாயை சரிவரக் கவனிக்காதது ஏன் என்பது குறித்து இரணியல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)