சாதாரண டிக்கெட்டில் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம்..!

0

விரைவு ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்வோர், சாதாரண டிக்கெட் எடுத்திருந்தாலும் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தி உள்ளது

பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில்வே புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது

ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில், சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில், குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு எனும் வசதியை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இந்த வசதி தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளாவுக்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களின் ஓரிரு 'டிரிசர்வ்டு' பெட்டிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 'விரைவு ரயில்களில், 'டி-ரிசர்வ்டு' பெட்டி வசதி பல மாதங்களாக உள்ளது. தினமும் ரயிலில் பயணிப்போருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிகபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரையில் பயணிக்கலாம். சாதாரண கட்டணத்துடன், 20 முதல் 30 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

வாய்ப்புள்ள மேலும் சில ரயில்களில் இந்த வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம். பயணிகள் 'டி-ரிசர்வ்டு' அல்லாமல் வழக்கமான முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்' என்று கூறினர்.

தமிழகத்தில் எந்த ரயில்களில் டி-ரிசர்வ்டு..?

சென்னை எழும்பூர் - கேரள மாநிலம், கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ் 11, 12, பெட்டிகளில் திருநெல்வேலி - கொல்லம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.

எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே, ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ் 12, 13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலும் பயணிக்கலாம்.

கர்நாடகா மாநிலம், மங்களூரு - எழும்பூர் இடையே இயக்கப்படும் மங்களூரு விரைவு ரயிலில் திருச்சி முதல் மங்களூரு வரை எஸ் 7, 8, 9, 10 பெட்டிகளிலும், மங்களூரு - எழும்பூர் இடையே இயக்கும்போது எஸ் 10 பெட்டியில் மட்டும் பயணிக்க முடியும்.

துாத்துக்குடி - கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலில், துாத்துக்குடி முதல் மதுரை வரை எஸ் 4, 10, 11, 13 பெட்டிகளில் பயணிக்கலாம்.

கன்னியாகுமரி - கர்நாடகா மாநிலம், பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயிலில் கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ் 6, 7 பெட்டிகளில் பயணிக்கலாம்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் ரயிலில் எஸ் 11, 12 பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரையில், சாதாரண டிக்கெட்டில் பயணிக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)